சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் உடல் 5 நாட்களாக அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்தது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் அனகாபுத்தூர் கோபால் செட்டித்தெருவில் வசித்தவர் சுடலைமுத்து (34) . வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி . துளசி (28) . இவர்களுக்கு பிரீத்தி (8) சரண்யா (5) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
சுடலை முத்துவுக்கு தனது தொழிலில் போதிய வருமானம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்பத்தை சமாளிக்க கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக வாழ்க்கையை நடத்துவதில் சிரமமாக இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுடலைமுத்து குடும்பத்திலிருந்து யாரும் வெளியே வரவில்லை.அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தில் இருந்தனர். இன்று காலை முதல் சுடலைமுத்து வீட்டை சுற்றி துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் பம்மல் சங்கர் நகர் போலீசாருக்கு புகார் அளித்ததன் பேரில் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் தூக்கில் உடல் வீங்கிய நிலையில் சுடலைமுத்து , துளசி, மகள்கள் ப்ரீத்தி, சரண்யா ஆகியோர் கிடந்துள்ளனர்.
அவர்கள் பிணமாகி 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. பின்னர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
