4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் பழனியில் கண்டுபிடிப்பு.. பிரமிக்க வைக்கும் வரலாறு..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கருப்பம்பட்டியில் 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலசமுத்திரம் அருகே குரும்பப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பவளக்கொடி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள இப்பகுதி மக்கள் ஆர்வமாக இருந்துள்ளனர். இதற்காக பழனியில் வசிக்கும் நாராயண மூர்த்தி என்ற தொல்பொருள் ஆய்வாளரை கடந்த 2017-ம் ஆண்டு அழைத்துள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த பகுதி சென்ற அவர் கோயில் மட்டுமின்றி, கோயிலை சுற்றி உள்ள பகுதிகளையும் ஆய்வு செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த வயல்வெளியின் பாறைகளின் மீதிருந்த குழிகள் குறித்து நாராயண மூர்த்தி கிராம மக்களிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த குழிகள் எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற பயன்படுத்தப்படம் இடம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவற்றை தூய்மை செய்து பார்த்த போது தான் அவை பழங்கால கல்லாங்குழிகள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் ஆச்சர்யமடைந்த அவர் கல்லாங்குழிகளின் வரலாறு குறித்து மக்களிடம் தெரிவித்து அவற்றை பாதுகாக்கும் படி கூறியுள்ளார்.
அவரின் அறிவுரையை தொடர்ந்து கல்லாங்குழிகள் இருந்த பகுதியை மண் போட்டு மூடி, வேலி அமைத்து அப்பகுதி மக்கள் பாதுகாத்து வந்துள்ளனர். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குக் பிறகு கடந்த 23-ம் தேதி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரொமைன் சைமனஸ் என்ற மானுட ஆய்வாளரை அழைத்து வந்து ஆய்வு செய்துள்ளார். இவர் உலகம் முழுவதும் பழங்குடி மக்கள் மற்றும் கல்லாங்குழிகள் குறித்து ஆய்வு செய்து வருபவர் ஆவார்.
அவரும் நாராயண மூர்த்தியும் இணைந்து மக்கள் போட்ட வேலிகளை அகற்றி, மண்ணை தோண்டி கல்லாங்குழிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது தான் அந்த கல்லாங்குழிகள் ஹோமோ எரக்டஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. தற்போது வாழும் நவீன கால மனிதர்களாகிய நாம் ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படுகிறோம். நமக்கு முன்பு முதன் முதலில் நிமிர்ந்து நடக்க தொடங்கிய மனிதர்களை தான் ஹோமோ எரக்டஸ் என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்த கல்லாங்குழிகளை ஹோமோ எரக்டஸ் மனிதர்கள் உருவாக்கியதாக ரொமைன் சைமனஸ் தெரிவித்துள்ளார். தகவல் பரிமாற்றத்திற்காக இந்த குழிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்த அவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.
மேலும் “ தென்னிந்தியாவில் பல பகுதிகளில் இதுபோன்ற கல்லாங்குழிகள் கோயில்களின் அருகிலேயே கிடைக்கின்றன. தற்போது கூட அம்மன் கோயிலுக்கு அருகே கிடைத்துள்ளது. இவை 2 லட்சம் முதல் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருக்கலாம். கல்லாங்குழிகளின் வயதை நேரடியாக கணக்கிட இயலாது. அந்த பகுதி அருகே இருக்கும் மனித எலும்புகள், எரிந்த நிலையில் இருக்கும் விறகு கட்டை, சாம்பல் ஆகியவற்றை கொண்டு கல்லாங்குழி உருவாக்கப்பட்ட காலத்தை கணிக்க முடியும்.
இந்த முறையில் தான் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லாங்குழிகளுக்குக் 4,10,000 ஆண்டுகள் வயது என கணக்கிடப்பட்டது. பழனியில் காணப்படும் கல்லாங்குழிகளும் அதே வடிவம், அளவில் போன்றவற்றுடன் ஒத்துப்போகிக்றது. எனவே இதனை 2 லட்சம் முதல் 4 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்று நாம் கணக்கிடுகிறோம்.” என்று தெரிவித்தார்.
தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி இதுகுறித்து பேசிய போது “ பழனி குரும்பப்பட்ட அருகே கண்டுபிடிக்கப்பட்ட கல்லாங்குழிகளில் 191 குழிகள் உள்ளன. இதில் சிறிய, அளவிலான, பெரிய அளவிலான குழிகள் உள்ளன. இந்த குழிகள் சமமற்ற முறையில் உள்ளது. இவை கீழ் தொல் பழங்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே அணியில் 11 பேரும் தமிழக வீரர்கள்- சீமான் அதிரடி
இதற்கு முன்பு மத்திய பிரதேசம் மாநிலம் பீம் பேட்கோவில் 7 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவே உலகின் மிகப்பழமையான கல்லாங்குழிகள் ஆகும். அதற்கு அடுத்த படியாக தென் ஆப்பிரிக்கவின் கலகாரி பாலைவனத்தில் கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது 4 லட்சம் ஆண்டுகள் பழமையானது.
தமிழ்நாட்டில் திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கல்லாங்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது பழனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லாங்குழிகள் உருவாக்கப்பட்ட பாறை ஆர்க்கியன் புரட்டரோசோயிக் காலத்தை சேர்ந்தது. இவை முன்னோர்களின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்தார்.