திருவள்ளூர்
 
திருவள்ளூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 300 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், நகர தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. 

இதற்கு பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமைத் தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க.வினர் முழக்கங்கள் எழுப்பி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரை பூந்தமல்லி காவலாளர்கள் கைது செய்தனர்.

இதேபோன்று பூந்தமல்லி நகர தி.மு.க. சார்பில் நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

இதில் காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு டிரங்க் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பின்னர், பூந்தமல்லி காவலாளர்கள் மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.