அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என சொல்லும்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தில் இருந்து 3 பேர் வெவ்வேறு கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

3 Candidates From Lottery Martin Family : தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் போட்டிபோட்டு வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். பெரிய கட்சிகள் சார்பில், ஒருமுறை வேட்பாளர்களாக களமிறக்கப்படுவதே பலருக்கு பெரும் கனவாக இருக்கும் நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர், பெரிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ஒருவர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுகிறார். மற்றொருவர் அதிமுக சார்பில் களமிறங்குகிறார். இன்னொருவர் புதுச்சேரியில் போட்டியிடுகிறார். அவர்கள் யார்.. யார் என்பதை பார்க்கலாம்.

கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கிய சாண்டியாகோ மார்ட்டின். பின்னர் லாட்டரி தொழிலில் களமிறங்கினார். தொடர்ந்து கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கி, தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில், ஒருவராக உருவெடுத்துள்ளார். தற்போதைய நிலையில், இவரது குடும்பம் கட்டுமானம், கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் என பல துறைகளில், பரவி உள்ளது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், முன்னணி கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கியதாக இவரது பெயர் ஊடகங்களில் பிரபலமானது.

ஒரே குடும்பத்தில் 3 வேட்பாளர்கள்

இவரது குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்கள், மூன்று முக்கிய கட்சிகள் சார்பில், சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், அரசியலிலும், சமூக பணியிலும் ஈடுபாடு காட்டிவந்த நிலையில், சமீபத்தில் அவர் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இவர் இணைந்த ஒரே மாதத்தில் திருச்சி லால்குடி தொகுதியில், போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மார்ட்டினின் மூத்த மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், லட்சிய ஜனநாயக கட்சி, என்கிற கட்சியை தொடங்கி, பின்னர் புதுச்சேரியில், பாஜக கூட்டணியில் இணைந்தார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியில், காமராஜர் நகர், நெல்லித் தோப்பு என இருதொகுதிகள் இவரின் கட்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது. அந்த இருதொகுதியிலும் போட்டியிட இவரே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல மார்ட்டினின் மகளான டெய்சியின் கணவர், ஆதவ் அர்ஜுனா, தற்போது தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நபராக உறுமாறி இருக்கிறார். இந்திய கூடைப்பந்து சம்மேளனம் போன்ற பதவிகளில் இருந்த இவர், ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து, செயல்பட்டு வந்தார். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால் சில சர்ச்சைகள் காரணமாக விசிக-வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். மிக குறுகிய காலத்தில் அக்கட்சியின் முக்கிய முகமாக ஆதவ் அர்ஜுனா மாறிய நிலையில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையின் வில்லிவாக்கம் தொகுதியில், வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதன்மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெவ்வேறு கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.