3-fold increase in the price of small onion
சின்ன வெங்காயத்தின் விலை 3 மடங்கு அதிகரித்து தற்போது ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் விலை அதிகரிக்க காரணம் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாகி உள்ளன.
மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பொதுமக்கள் யாரும் வெளியில் வராததால், சில்லறை காய்கறி விற்பனை மற்றும் தெருவோர காய்கறி கடைகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது. அதேபோல் சில ஓட்டல்களும் மூடப்பட்டன. சென்னையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள் மழை காரணமாக மூடப்பட்டதே காரணம் என்று கூறுகின்றனர். காய்கறி மார்கெட் கடந்த 4 நாட்களாக திறக்கவில்லை. வியாபாரிகள், கோயம்பேடு சென்றும் காய்கறிகள்
வாங்கவில்லை. இதனால், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரமாக விற்பனை மந்தமாக இருந்தது. இதனால், காய்கறிகளின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியபாரிகள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் வெங்காய சந்தைக்கு ஒட்டன்சத்திரம், நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அது மட்டுமல்லாது, இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சின்ன வெங்காயத்தன் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் கடந்த வாரம் ஒரு கிலோ 40 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில், தற்போது 3 மடங்கு அதிகரித்து 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. வெங்காய செடிகள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. இதனால் சின்ன வெங்காய உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்தாகவும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
