வண்டலூர் அருகே மின்சார ரயில் மோதி விபத்து...வாய் பேச முடியாத,காது கேளாத 3 சிறுவர்கள் துடிதுடித்து பலியான சோகம்
தொடர் விடுமுறை காரணமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த 3 மாற்றுத்திறனாளி சிறுவனர்கள் மின்சார ரயிலில் அடிபட்டு துடி துடித்து பல்சான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் மோதி சிறுவர்கள் பலி
ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் வீடுகள், சுற்றுலா தளம் என பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கர்நாடக மாநிலம் தொப்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சஞ்சம் பண்ணன், இவரது இளைய சகோதரர் அனுமந்தப்பா ஆகிய இருவரும் தமிழ்நாட்டில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடவுள் வேடம் அணிந்து யாசகம் பெற்று தொழில் செய்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் கர்நாடகவில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர்.
தண்டவாளத்தில் நடந்து சென்ற சிறுவர்கள்
இந்தநிலையில் தொடர் விடுமுறை காரணமாக தங்களது பெற்றோரை பார்க்க சிறுவர்கள் சுரேஷ், ரவி, மஞ்சுநாத் ஆகியோர் ஊரப்பாக்கத்திற்கு வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த சிறுவர்கள் அந்த பகுதியில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் சிறுவர்கள் இரண்டு பேருக்கு காது கேட்காது எனவும் ஒரு சிறுவனுக்கு வாய் பேச முடியாது எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 3 சிறுவர்களும் ஊரப்பாக்கம்- வண்டலூர் இடையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் விளையாடி உள்ளனர்.
துடி துடித்து பலியான சோகம்
அப்போது சென்னை பீச்சில் இருந்து செங்கல்பட்டை நோக்கி மின்சார ரயில் வேகமாக வந்துள்ளது. இதனை கவனிக்காமல் சிறுவர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். மேலும் ரயில் ஓட்டுநர் ஹார்ன் அடித்தும் எச்சரித்துள்ளார். இருந்த போதும் 3 பேரும் விளையாடிக் கொண்டே சென்றுள்ளனர். இதன் காரணமாக ரயில் மோதி 3 சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டு துடி துடித்து உயிரிழந்துள்ளனர். ரயில் விபத்து ஏற்பட்டதையடுத்து அந்த பகுதியில் சிதறி கிடந்த சிறுவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ரயில் மோதியதில் சிறுவர்கள் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படியுங்கள்