நடுவழியில் பேருந்துகளை சிறை பிடிக்க மாட்டோம் என உத்தரவாதம் கொடுக்கனும்-அரசுக்கு செக் வைத்த ஆம்னி உரிமையாளர்கள்
வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை சிறைப்பிடித்த அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் விடுமுறை- 5 லட்சம் பேர் பயணம்
ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை தினத்தையொட்டி 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கும் வெளியூருக்கும் சுற்றுலா சென்றுள்ளனர். இந்தநிலையில் விடுமுறை முடிவடைந்து இன்று மாலை முதல் மீண்டும் சென்னை திரும்ப பொதுமக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆம்னி பேருந்துகள் ஓடாது என வெளியான அறிவிப்பு வெளியூர் சென்ற பயணிகளை திக்குமுக்காட வைத்தது. இந்தநிலையில் ஆம்னி பேருந்து வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சிறை பிடிக்கப்பட்ட பேருந்துகள்
அப்போது, பேசிய கூட்டமைப்பின் நிர்வாகி ஜெய பாண்டியன், காரணமின்றி 118 வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், சிறை பிடிக்கப்பட்டதற்கு ஆர்.டி.ஓ. க்கள்.முறையான விளக்கம் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். வரிகளை முறையாக செலுத்திய வாகனங்கள் சிறைபிடித்து, மக்களை நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால், பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறிய அவர், சிறைப்பிடித்த அதிகாரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் அரசு மென்மையாக நடந்துக்கொள்வதாகவும், அதிகாரிகள் தான் கண்டிப்பாக நடக்கின்றனர்.
உத்தரவாதம் கொடுக்கனும்
நடுவழியில் பேருந்துகளை சிறைப்பிடிக்க மாட்டோம் என உத்தரவாதம் கொடுத்தால் பேருந்து இயக்குவோம் என தெரிவித்தார். வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் தமிழ்நாடு பதிவாக மாற்ற 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக இருந்தாலும், தங்களுக்கு 5 லட்சம் ரூபாய் செலவாகிறது என தெரிவித்தார். ஏற்கனவே சுமார் 1000 பேருந்துகள் வெளி மாநில பதிவு எண்ணில் இருந்து தமிழ்நாடு பதிவு எண்ணாக மாற்றிவிட்டதாகவும், மீதமுள்ள பேருந்துகளும் படிப்படியாக மாற்ற தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படியுங்கள்