Asianet News TamilAsianet News Tamil

நாமக்கல்லில் நாளை 2-ஆம் கட்டமாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் - ஆட்சியர் அறிவுப்பு...

2nd stage Polio vaccine special camp tomorrow in Namakkal - Collector announced
2nd stage Polio vaccine special camp tomorrow in Namakkal - Collector announced
Author
First Published Mar 10, 2018, 9:17 AM IST


நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 2-ஆம் கட்டமாக நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் அமைக்கப்படுகிறது என்றும், அதில் 1.6 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 96 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

அதேபோல நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆம் கட்டமாக நடைபெறும் முகாமில் 1.6 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக கிராம பகுதிகளில் 1079 முகாம்களும் நகராட்சி பகுதிகளில் 119 முகாம்களும் என மொத்தம் 1198 முகாம்கள் அமைக்கப்பட  உள்ளன. 

இதில் பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 4823 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். 

மேலும், மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், இரயில் நிலையம், சந்தைகள், சினிமா திரையரங்குகள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட  உள்ளது

சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 36 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 118 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. முகாம்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது, பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது. எனவே, மாவட்டத்திலுள்ள மக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் புதியதாக பிறந்த குழந்தைகளுக்கும் நாளை 2-ஆம் கட்டமாக நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்தை போட்டுக்கொள்ள வேண்டும்.

போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெளியூர் அல்லது வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தாய்மார்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருத்து போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்"என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios