நாமக்கல் அருகே காதல் மனைவியை கைவிட்டு, 2-வது திருமணம் செய்த இளைஞரை மணக்கோலத்திலேயே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் பெரியபள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் நாமக்கலில் உள்ள அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் படித்துள்ளார். அப்போது நாமக்கல்லில் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த கார்த்திகேயனுக்கும் சரஸ்வதிக்கும் இடையே வழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

 

இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகியதால், சரஸ்வதி கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது இருவரும் படித்துக் கொண்டிருந்ததால் காதலனின் அறுவுறுத்தலின் பேரில் சரஸ்வதி கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து படிப்பை முடித்த கார்த்திகேயன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பிறகு சரஸ்வதியும் படிப்பை முடித்த கையோடு சென்னையில் சென்று பணிபுரிந்துள்ளார்.
 
இதனையடுத்து இருவரும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அப்போது சரஸ்வதி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இன்னும் வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை என்பதை சுட்டிக்காட்டிய கார்த்திகேயன் பேச்சைக் கேட்டு, மீண்டும் சரஸ்வதி கர்ப்பத்தை கலைத்துள்ளார். 

இந்நிலையில் கடந்த வாரம் சரஸ்வதியை சென்னையில் விட்டுவிட்டு தனியாக சொந்த ஊருக்கு வந்த கார்த்திகேயன் 2-வது திருமணம் செய்ய முடிவு செய்து, இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இந்த அறிந்த சரஸ்வதி கார்த்திகேயன் வீட்டுக்கு சென்ற போது உறவினர்கள் அவரை விரட்டு அடித்துள்ளனர்.

 

பின்னர் அவரது குடும்பத்தினர் கார்த்திகேயனுக்கு 2-வது திருமணத்தை செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் கல்யாண கோலத்தில் இருந்த கார்த்திகேயனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.