காஞ்சிபுரம் அருகே டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2,000 லிட்டர் வெள்ளை பெட்ரோல் வீணாகியது.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் அன்புமணி (40), அன்பழகன் (30). லாரி ஓட்டுநர்களான இவர்கள் இருவரும் புதன்கிழமை நள்ளிரவில் சென்னை துறைமுகத்தில் இருந்து டேங்கர் லாரியில் வெள்ளை பெட்ரோல் ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அதிகாலை காஞ்சிபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சேக்கான்குளம் அருகே சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் அன்புமணியும், அன்பழகனும் லாரியின் உள்ளே சிக்கி உயிருக்குப் போராடினர்.
மேலும், டேங்கரில் ஓட்டை ஏற்பட்டு 2,000 லிட்டர் வெள்ளை பெட்ரோல் சாலையோர பள்ளத்தில் வீணாய் வெளியேறியது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் கசிந்த பெட்ரோலால் தீ பிடிக்காமல் இருக்க இரசாயனம் கலந்த நுரையை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.
இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
