நாமக்கல்

நாமக்கல்லில் மலைப்பாதை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் பாறையில் மோதியதில் 18 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் இருந்து வேன் ஒன்றில் 18 பேர் தேனியிலுள்ள மேகமலைக்கு நேற்று முன்தினம் சுற்றுலாவுக்கு சென்றனர். அவர்கள் மேகமலையை சுற்றிப் பார்த்துவிட்டு நாமக்கல்லுக்கு நேற்று திரும்பினர். அப்போது வேனை ஈரோட்டை சேர்ந்த முருகேஷ் (40) என்பவர் ஓட்டி வந்தார். 

மலைப் பாதையில் மந்திபாறை என்னுமிடத்தில் சாலையோர வளைவில் வேன் திரும்பியபோது வேன் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தடுமாறிய வேன் தாறுமாறாக ஓடியது. பயத்தில் வேனில் இருந்தவர்கள் அலறினர். 

மலைப் பாதையில் பள்ளத்தில் வேன் கவிழாமல் இருக்க ஓட்டுநர் வேனை ஒருபக்கமாக திருப்பினார். ஆனால், அந்த வேன் சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரின் அருகில் உள்ள பாறையில் பலமாக மோதி நின்றது.

இந்த விபத்தில், வேனில் பயணித்த புதுபாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (33), நாமக்கல்லை சேர்ந்த சுந்தரராஜன் (47), பரமத்திவேலூரை சேர்ந்த மோகன்ராஜ் (30), சண்முகம் (40), மற்றொரு சுந்தரராஜன் உள்பட 18 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் அனைவரும் சேர்க்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து சின்னமனூர் காவல் ஆய்வாளர் இம்மானுவேல் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.