18 acre of pond is missing

கோயம்புத்தூர்

பதினெட்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை காணவில்லை என்றும் அதனை மீட்டுத் தர வேண்டும் என்று விவசாயிகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி இந்த மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

ஆட்சியர் அரிகரன் தலைமை வகித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியைச் சேர்ந்த ஆறுச்சாமி மற்றும் விவசாயிகள் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அந்த மனுவில், “எங்கள் கிராமம் தமிழக – கேரள எல்லையில் உள்ளது. இங்கு கோழிப்பாறை என்ற இடத்தில் முண்டப்பள்ளி அம்மன்குளம் என்ற குளம் இருந்தது.

பதினெட்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெற்று வந்தது. அதுமட்டுமின்றி, தாவளம், பட்டைய கௌண்டனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டமும் உயர காரணமாக இருந்தது.

தற்போது அந்தக் குளத்தை காணவில்லை. அதிகாரிகள் அந்த குளத்தைச் சிலருக்கு பட்டாப்போட்டு கொடுத்துவிட்டனர். இதனால் அவர்கள் அங்கு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.

குளத்தை காணாததால், மழைக்காலத்தில்கூட எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயருவது இல்லை. இதனால் இந்த குளத்தை நம்பி பாசனம் பெற்று வந்த நிலம் பாலைவனமாகி வருகிறது.

எனவே எங்கள் பகுதி மீண்டும் செழிப்பாக இருக்க காணாமல்போன அந்த குளத்தை உடனடியாக மீட்க வேண்டும” என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.