செங்கல்பட்டு அருகே பாலாற்றங்கரை மற்றும் வீட்டின் வெளிப்புறத்தில் பூமிக்கு அடியே புதைத்து வைத்திருந்த 175 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒரு பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கத்தில் எரிசாராய கேன்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாலுகா இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் வளர்மதி வீட்டின் அருகே சந்தேகத்துக்கு இடமாக சாராய வாசனை வந்தது. அதேபோல் பாலாற்றங்கரையில் பல்வேறு இடங்களில் சாராய நெடி வீசியது. இதையடுத்து அப்பகுதிகளில் போலீசார் பள்ளம் தோண்டி பார்த்தபோது, பூமிக்கு அடியே ஒரு பிளாஸ்டிக் கேனில் 35 லிட்டர் வீதம் 5 கேன்களில் 175 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

எரிசாராயம் ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது. அந்த எரிசாராய கேன்களை போலீசார் பறிமுதல் செய்து, அங்கு வசித்த பூபாலன் மனைவி வளர்மதி (45) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்றிரவு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் எனக் கருதப்படுகிறது.