திருவள்ளூர்

ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 17 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 7 பேரை காவலாளர்கள் திருவள்ளூரில் கைது செய்தனர்.

ஆந்திராவில் இருந்து சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக தமிழகத்திற்கு தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருகிறது என்ற தகவல் காவலாளர்களுக்கு கிடைத்தது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் காவலாளர்கள் தீவிர வாகன சோதனையில் நடத்தினர். 

அதுமட்டுமின்றி திருவள்ளூரின் ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர் வாகன சோதனை நடத்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை எஸ்.பி. தலைமையிலான தனிப்படை காவலாளர்கள் ஆரம்பாக்கம் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 17 லாரிகளை பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.  அதனைத் தொடர்ந்து, ஆரம்பாக்கம் காவலாளர்கள் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.