திருப்பரங்குன்றம் மலையில் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளிடையே சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இந்து முன்னணியின் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு, மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகவும், முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அந்த கோயிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்கள். இந்த மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்காவும் உள்ளது. இந்த தர்காவிற்கும் இஸ்லாமியர்களும் அதிகளவு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திடீரென மலை யாருக்கு சொந்தம் என பல்வேறு சர்ச்சைகள் இரண்டு தரப்பிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் திருப்பரங்குன்றம் மலையைக் காக்க போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது. இதில் பல இந்து அமைப்புகளும் கலந்து கொள்வார்கள் என அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்து முன்னனி போராட்டத்திற்கு அழைப்பு

மேலும் பல இடங்களில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் மதுரை பகுதி பதற்றமாக மாறியது. இதனையடுத்து இந்து முன்னனி அமைப்பினரின் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து மதுரை பகுதியில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்து மற்றும் இசுலாமிய அமைப்புக்களை சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கையை பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

144 தடை உத்தரவு

இந்த நிலையில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில், மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் வருகை தராத வகையில் இன்று காலை ( 3-2-2025 காலை 6 மணி முதல் 4-2-2025) முதல் நாளை இரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை பாதுக்காக்கும் பொருட்டு, மனித வாழ்வு , பொது பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு 163 BNSS (144 CrPC) தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.