தமிழகத்திற்கு தண்ணீரை தடுக்கும் வகையில் கேரளா, ஆந்திரா, கர்நாடக அரசுகள் தடுப்பணை கட்டுவதை கண்டித்து, வருகிற 20-ஆம் தேதி 12 இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளது.
காவிரி நீரும் கிடைக்கவில்லை. பருவமழையும் பொய்த்து விட்டது. இதனால் விவசாயம் அழிந்து விட்டதால் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடகா மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கேயும், கேரளா பவானி, அமராவதி ஆறுகளுக்கு வரும் தண்ணீரை தடுக்கவும், ஆந்திரா பாலாற்றின் குறுக்கேயும் தடுப்பணைகளை கட்டுகின்றன அந்தந்த மாநில அரசுகள்.
ஆனால், மத்திய அரசு வறட்சி நிலையில் இருக்கும் தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யாமலே இருந்து வருகிறது. மாநில அரசிலும் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா அரசுகள் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரை தடுக்க தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
விவசாயிகளின் கடன்கள் முழுவதையும் இரத்து செய்ய வேண்டும்.
விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருப்பூர் மாவட்டத்தில் 12 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 20-ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்” என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
