தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று வேகமாக பரவியது. இந்த நிலையில் தொற்றினை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தினந்தோறும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு இரண்டு வகையான கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது ஒமைக்ரான் என்னும் புதிய வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், பொதுமக்கள் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதாரத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 22 மாநிலங்களில் ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 653 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 165 பேருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் தமிழகத்தில் ஏற்கனவே 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்குறித்து சுகாதாரத்துறை கூறுகையில், தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டள்ளது. ஓமைக்ரான் தொற்று உறுதியானவர்களில் 7 பேருக்கு சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூரில் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமைக்ரான் தொற்று உறுதியனர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 34 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமைக்ரான் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 664 ஆக அதிகரித்துள்ளது.
