சென்னை துறைமுகத்தில் 45 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக முன்னாள் இந்தியன் வங்கி கிளை மேலாளர் உள்பட 11 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 

சென்னை துறைமுகத்தில் 45 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக முன்னாள் இந்தியன் வங்கி கிளை மேலாளர் உள்பட 11 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் சார்பில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் நிரந்தர வைப்பு நிதியாக 100 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் துணை இயக்குநர் எனக்கூறி கணேஷ் நடராஜன் என்பவர் பல்வேறு போலி ஆவணங்களை சமர்பித்து, நிரந்தர வைப்பு நிதி 100 கோடி ரூபாயை இரு வேறு நடப்பு வங்கிக் கணக்குகளில் மாற்ற முயன்றுள்ளார். பின்னர் பணம் மாற்றப்பட்ட ஒரு வங்கி கணக்கில் இருந்து 45 கோடிக்கு மேலான பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இது துறைமுக பொறுப்புக் கழகம் தொடர்புடைய விவகாரம் என்பதால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி மோசடியில் தொடர்புடைய முன்னாள் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சேர்மதி ராஜா, கணேஷ் நடராஜன், தரகர் மணிமொழி உள்ளிட்ட 11 பேரை கைது செய்து அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர். சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை இந்த விவகாரம் தொடர்பாக பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்புடைய தமிழகம் முழுவதும் உள்ள 15 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதுமட்டுமின்றி மோசடி நபர்கள் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிய 45 கோடிக்கு மேலான பணம், சுமார் 230 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள், வாகனங்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களில் முதலீடு செய்ததையும் அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்தனர். மேலும், மோசடி செய்யப்பட்ட 45 கோடிக்கு மேலான பணத்தில் 15.25 கோடி ரூபாய் பணம் மாற்றப்பட்ட போலி நடப்பு வங்கிக் கணக்கில் இருந்து துணை இயக்குநராக நாடகமாடிய கணேஷ் நடராஜன் என்பவரால் எடுக்கப்பட்டதும் மீதமுள்ள 31.65 கோடி ரூபாய் பணம் 49 பணப்பரிமாற்றங்கள் மூலம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் மாற்றப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட கணேஷ் நடராஜன், சேர்மதி ராஜா, சுடலை முத்து, விஜய் ஹெரால்டு, ராஜேஷ் சிங், சியாத், சாகீர் ஹுசைன், சுரேஷ் குமார், மணிமொழி, செல்வகுமார், அருண் அன்பு ஆகிய 11 பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.