மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து தூத்துக்குடியில் சில்லறை வழங்க 500க்கு 100 ரூபாயும், 1000க்கு 200 ரூபாயும் கமிஷன் வாங்கும் பணியில் இடைத்தரகர்கள் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் தங்கள் கையில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை 100 ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு பல்வேறு இடங்களை நாடிச் சென்றனர்.

தூத்துக்குயில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில், சில்லறை கொடுக்க முடியாமல், 500 ரூபாய் கொடுத்தால் 500 ரூபாய்க்கும் பெட்ரோல் நிரப்ப வேண்டிய நிலை நீடித்தது. இதனால், சில இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக பொதுமக்கள் சிலர் திரண்டனர்.

ஆனால், மத்திய அரசு உத்தரவுப்படி அஞ்சல் அலுவலகத்தில் புதன்கிழமை பணம் பரிமாற்றம் ஏதும் இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கையில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வெளியூர்களுக்கு பேருந்தில் பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பொதுமக்களின் அவதியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இடைத்தரகர்கள் சிலர், தங்களிடம் உள்ள 100 ரூபாய் நோட்டுகளை சில்லறையாக வழங்க முன்வந்தனர்.

ஆனால், 500 ரூபாய் நோட்டுகளுக்கு ரூ. 400-ம், 1000 ரூபாய் நோட்டுகளுக்கு ரூ. 800-ம் வழங்கி மீதியை கமிஷன் அடித்தன்ர்.

தூத்துக்குடி அண்ணாநகரில் சிலர் வெளிப்படையாக இந்த செயலில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி ஏராளமானோர் இடைத்தரகர்களை சூழ்ந்துச் சில்லறை பெற்றுச் சென்றனர்.