Asianet News TamilAsianet News Tamil

ஏலகிரியில் 100 ஏக்கர் பரப்பில் தாவரவியல் பூங்கா - அமைச்சர் கே.சி.வீரமணி...

100 acres of land in Alakiri Botanical Gardens - Minister KC Veeramani ...
100 acres of land in Alakiri Botanical Gardens - Minister KC Veeramani ...
Author
First Published Dec 28, 2017, 10:00 AM IST


வேலூர்

ஏலகிரியில் 100 ஏக்கர் பரப்பில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான பணி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், ஏலகிரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைப்பெற்றது.

இந்த முகாமில் திருப்பத்தூர் வட்டாட்சியர் ஸ்ரீராம் வரவேற்றார்.  ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். திருப்பத்தூர் சார் ஆட்சியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பேசினர்.

இந்த முகாமில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று, 144 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, தேசிய முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை, மகப்பேறு உதவி, திருமண உதவி, தையல் இயந்திரம், சலவை பெட்டி, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்முகாமில், ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், "ஏலகிரியில் உள்ள மலைவாழ் பட்டா வழங்க வேண்டி மனு அளித்துள்ளனர். இவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு சர்வே நடந்து வருகிறது. அதற்கான பணி முடிந்தபிறகு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, "ஏலகிரியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தார்ச் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

கோடை விழா நிகழ்ச்சிக்கான விழா மேடை நிரந்தரமாக கட்டுவதற்கான பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 100 ஏக்கர் பரப்பில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான பணி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஏலகிரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான தங்கும் விடுதி அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் தங்கும் விடுதி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மலையில் உள்ள தடுப்பு அணைகளை சீரமைத்து, விவசாயிகள் பயன்பெறும் வகையில், தண்ணீரை பயன்படுத்துவதற்கான பணி மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.

இந்த முகாமில், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பிரேம்குமார், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசன், அன்பரசன், வட்டார மருத்துவ அலுவலர் சுமதி,

முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ரமேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் அச்சுதன், கோவிந்தசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios