பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தரமற்ற உணவுப் பொருள் பயன்படுத்தப்பட்டதே காரணம் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து விசாரணையை துரிதப்படுத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தரமற்ற உணவுப் பொருள் பயன்படுத்தப்பட்டதே காரணம் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து விசாரணையை துரிதப்படுத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் 7 ஸ்டார் என்ற உணவகம் அமைந்துள்ளது. காதர் பாஷா மற்ரும் அவரது மகன் அம்ஜத் பாஷா ஆகியோர் நடத்தி வந்த இந்த உணவகத்தில், கடந்த செப்டம்பர் மாதம் துந்தரீகம் பட்டைச் சேர்ந்த ஆனந்த் , அவரது மனைவி பிரியதர்ஷினி, மகள் லோசினி, மகன் சரண் ஆகியோர் உணவு சாப்பிட்டுள்ளனர். பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டு விட்டு வீடு திரும்பிய அவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் 10 வயது சிறுமியான லோசினி, ஆரணி மருத்துவமனையிலேயெ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அந்த உணவகத்தில் சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டவர்களுக்கும் இதே பிரச்னை ஏற்பட்டு, பலரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, 7 ஸ்டார் உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் உணவக உரிமையாளர்கள் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து 40 நாட்களாக சிறையில் இருப்பதாகவும், பதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் கூறி அம்ஜத் பாஷா ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். பின்னர் அனைவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 7 ஸ்டார் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உணவகத்தில் பயன்படுத்தப்பட்ட கெட்டுப்போன சில்லி சிக்கன், தரமற்ற தண்ணீர் ஆகியவையே 30 பேரின் உடல்நல பாதிப்புக்கு காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் விசாரணையை துரிதப்படுத்துமாறு திருவண்ணாமலை எஸ்.பிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
