சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நடக்கும் செயின் பறிப்பு சம்பவங்களால், பெண்கள் பெரிதும் அச்சத்துக்குள்ளாகி உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட குன்றத்தூர் மற்றும் அரும்பாக்கம் பகுதியில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரிடம் லிப்ட் கேட்பதுபோல் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட 10 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். வழக்கறிஞரான இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார். சிவசுப்பிரமணியம், நேற்று வழக்கம்போல் மதுரவாயிலில் இருந்து தாம்பரத்துக்கு வந்துள்ளார். மதுரவாயல் - தாம்பரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் தனியாக நின்றபடி லிப்ட் கேட்டுள்ளான். அந்த சிறுவன் பார்ப்பதற்கு பாவமாக தெரிந்ததால், போகும் வழிதானே இறக்கி விடுவோம் என்று வாகனத்தை நிறுத்தியுள்ளார் சிவசுப்பிரமணியம்.

இருசக்கர வாகனம் நின்ற உடனேயே, அந்த சிறுவன், வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டுள்ளான். மேலும், அங்கு மறைந்திருந்த 9 சிறுவர்கள் வழக்கறிஞரைச் சூழ்ந்து கொண்டு மிரட்டியுள்ளனர். 

அந்த சிறுவர்கள், ஆயுதங்கள் வைத்திருந்துள்ளனர். இதனால் பயந்துபோன வழக்கறிஞர், தன்னிடம் இருந்த விலை உயர்ந்த 2 செல்போன்கள், லேப்டாப், 3 பவுன் தங்க சங்கிலி, பணம் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு அவர்கள் ஓடிவிட்டனர். இதனை அடுத்து, சிவசுப்பிரமணியம், குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குன்றத்தூர் போலீசார், அந்த சிறுவர்களை தேடி வருகின்றனர். 

இந்த சம்பவம், இரவில் தனியே செல்லும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியே செல்பவரின் பாதுகாப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது என்று வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.