கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிவந்த சரக்கு ஆட்டோவின் தகுதிச் சான்று நீக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விதிகளை மீறி இயக்கப்பட்ட ஒன்பது ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேட்டியம்பட்டியில் நேற்று முன்தினம் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒன்பது மாணவ, மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து நேற்று காலை கிருஷ்ணகிரியில் இராயக்கோட்டை மேம்பாலம் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமார், செந்தில்குமார், குண்டுமணி ஆகியோர் திடீரென ஆய்வு நடத்தினர்.

அந்த ஆய்வில் விதிகளை மீறி அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஒன்பது ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கெத்து காட்டினர்.

இதே போல இராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த சரக்கு ஆட்டோவின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது என்பது கொசுறு தகவல்.