ரொம்ப மழை பெய்யுது சார்..லீவு கொடுத்த கலெக்டர்..! வைரலாகும் டிவிட்டர் பதிவு.
சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டரில் விருதுநகர் ஆட்சியரிடம் பள்ளிக்கு விடுமுறை கேட்ட மாணவனுக்கு பதிலளித்த ஆட்சியர், உங்கள் தொடர் பிரார்த்தனையின் படி பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார். மேலும் வீட்டில் இருந்து ஒழுங்காக வீட்டு பாடங்களை செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு வங்ககடலில் நிலைக்கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி , நெல்லை, தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி , நெல்லை, விருதுநகர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் மேகானந்த ரெட்டி . இவர் சமுக வலைதளமான டிவிட்டரில் ரொம்ப அக்டிவாக இருப்பவர். தொடர் கனமழையின் போது , மாணவர்கள் இவரை டேக் செய்து விடுமுறை கேட்பது அதற்கு அவர் நகைப்புடன் பதிலளிப்பது அவ்வப்போது வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது மழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால், பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகானந்த் ரெட்டியையும் டேக் செய்து “சார், விருதுநகரிலும் கனமழை பொழிந்து வருகிறது”என சொல்லி இருக்கிறார் மாணவர் ஒருவர்.
அதை கவனித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகானந்த் ரெட்டி, “விடுமுறை வேண்டி உங்கள் தொடர் பிரார்த்தனைகளுக்கு நன்றி. நம் மாவட்டத்திலும் அதிக மழை பொழிவு இருந்து வருகிறது தம்பி. அதனால் நாளை (26.11.21) மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை பயன்படுத்தி ஹோம்வொர்க்கை முடிக்கவும். ஆசிரியர்கள் சரிபார்ப்பார்கள். பாதுகாப்பாக இருங்கள்” என சொல்லி அதற்கு ரிப்ளை கொடுத்துள்ளார்.மாவட்ட ஆட்சியரின் ரிப்ளை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.