சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிப்பிப்பாறை பகுதியில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று பிற்பகல் வெடி மருந்து தயாரிக்கும் போது மருந்துகளில் உராய்வு ஏற்பட்டதில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

உடனே இதுதொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

தொடர்ந்து பட்டாசு ஆலையில் பட்டாசுகள் வெடித்து வருவதால் தீயை அணைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பட்டாசு ஆலைகளில் 50 பேருக்கு மேல் பணியாற்றக் கூடாது என்று நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், 30 தொழிலாளர்கள் மட்டுமே இன்று ஆலையில் இருந்ததாகத் தெரிகிறது. இதனால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.