சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், படுகாயமடைந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வெடி மருத்து செல்லுத்தும் போது வேதிப்பொருள் உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் கூறப்படுகிறது.