விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பட்டாசு ஆலைகள், 50% தொழிலாளர்களுடன் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு இயங்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்துள்ளார்.
ஆனால் கடந்த முறை 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை போல அல்லாமல் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர், சில தொழில்துறைகள் செயல்பட அனுமதியளித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. தொழிற்பேட்டைகள், ஊருக்கு வெளியே அமைந்துள்ள தொழிற்சாலைகள், சிறு குறு தொழில்கள் ஆகியவற்றிற்கு, ஊழியர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்டாசு தொழிலுக்கு பெயர்போன விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் பட்டாசு ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் தான். அவர்களுக்கு பட்டாசு ஆலைகள் இயங்கினால் தான் வருமானம். அந்தவகையில் பட்டாசு தொழிலை பெரிதும் சார்ந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் 50% ஊழியர்களுடன் பட்டாசு ஆலைகளை இயக்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் அனுமதியளித்துள்ளார்.
