வெம்பக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்! - கானொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் 2ம் கட்ட அகழாயவுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் கானொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வுப் பணிகள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற்றன.
இங்கு, இரும்பு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிக அளவில் கிடைத்தன. மேலும், நுண்கற்காலக் கருவிகள், பல வகையான பாசிமணிகள் மற்றும் சுடுமண்ணாலான காதணிகள், பொம்மைகள் உட்பட 3,200-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன.
அதைத் தொடர்ந்து, தற்போது 2-ம் கட்ட அகழாய்வுப் பணிக்கு மத்திய-மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. 2-ம் கட்ட அகழாய்வுப் பணிக்காக சுமார் 3 ஏக்கர் நிலம் அப்பகுதியில் தேர்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக அவ்விடத்தை சுத்தம் செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழ்நாடு முதலைமைச்சர் ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பணியினை தொடங்கி வைத்தார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், முதல்கட்ட அகழாய்வுப் பணிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் மூலம், இப்பகுதியின் தொன்மையை அறிய முடிகிறது.
முதல் கட்ட அகழாய்வு மாதிரி மற்றும் சேகரிக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள் விருதுநகரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அரங்கு அமைத்து காட்சிப்படுத்தப்பட்டன. இதை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களும் பார்வையிட்டனர்.
மேலும் தொடர்ந்து, அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டு பகுதியையும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பார்வையிட்டுச் செல்வதற்காக ஏற்பாடு செய்து தரப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, வெம்பக்கோட்டை தாசில்தார், விஜயகரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் தங்கவேலு மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.