விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பால்கோவா தான். அந்த அளவிற்கு அங்கு தயாரிக்கப்படும் பால்கோவா பிரபலமானது. இங்கு தயாராகும் பால்கோவா வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக புவிசார் குறியீடிற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனை மத்திய அரசு தற்போது அங்கீகரித்து புவிசார் குறியீடு வழங்கி பெருமை படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்கிற பெயரில் பல்வேறு ஊர்களில் விற்பனை நடந்து வருகிறது. அவை பெரும்பாலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படுவதில்லை. பெயர் மட்டும் அவ்வாறு போடப்பட்டிருக்கும்.

இந்தநிலையில் தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால், இனி ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்ற வார்த்தையை வேறு பகுதிகளை சேர்ந்த யாரும் பயன்படுத்தி அவர்கள் தயாரித்த பால்கோவாவை விற்பனை செய்ய முடியாது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தொழில் ஈடுபட்டிருக்கும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிலநாட்களுக்கு முன்னர் திண்டுக்கல் பூட்டிற்கும் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.