20 பேர் உயிரை காவு வாங்கிய பட்டாசு ஆலை வெடி விபத்து... உரிமையாளர் கைது...!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி அன்று நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து தமிழகத்தையே உலுக்கியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி அன்று நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து தமிழகத்தையே உலுக்கியது. ஸ்ரீமாரியம்மாள் என்ற பெயரில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெடிபொருட்களுக்கு மருந்து நிரப்பும் போது உராய்வு ஏற்பட்டு விபத்து நடந்தது. இந்த கொடூர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலும், 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் சாத்தூர், சிவகாசி, மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக சாத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் பெருமாள் தலையில் 5 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ளவர்களை தேடி வந்தனர். இதில் ஏற்கெனவே குத்தகைக்காரர்கள் மூவர் கைதான நிலையில் இன்று காலை ஆலை உரிமையாளர் சந்தனமாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.