4 பேர் உயிரிழந்த இடத்தில் வெடி பொருள் நிரப்பிய வேன்; அதிகமான அளவில் வெடி மருந்து இருப்பதால் அதிகாரிகள் அச்சம்
காரியாபட்டி அருகே தனியார் கல் குவாரியில் வெடிபொருள் வெடித்து 4 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் இன்னும் அதிகமான அளவு வெடிபொருட்கள் இருப்பதால் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில் ஆவியூரைச் சேர்ந்த சேதுராமன் என்பவர் பெயரில் இயங்கும் ஆர்எஸ்ஆர் என்ற கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் மே 1 தொழிலாளர் தினம் விடுமுறை தினமான இன்று அங்கு பணிபுரியும் மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (வயது 47), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பெரியதுரை (25), குருசாமி (60) ஆகிய மூன்று பேர் கல்குவாரிக்குள் வெடி மருந்து லாரியில் இருந்து குடோனுக்கு வெடிபொருள்கள் மாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு எதிர்பாராத விதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவியூர் காவல் துறையினர் முதலில் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு நேரில் ஆய்வு செய்தனர்.
காவல்துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறைனயினர் மட்டும் உடல்கள் சிதறி கிடக்கும் இடத்திற்கு நேரில் சென்று அங்கு உடல்களை அடையாளம் காணுவது குறித்து ஆய்வில் ஈடுபட்டனர். வெடி விபத்து நடைபெற்ற கல்குவாரியில் மதுரை மாநகர் வெடிபொருள் தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
கல்குவாரி உரிமையாளர் சேதுராமன் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கல்குவாரியில் உள்ள வெடிபொருள் குடோன் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் பெயரில் உரிமம் பெற்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இங்கிருந்துதான் சுற்றுவட்டார கல்குவாரிகளுக்கு வெடி மருந்து கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது.
இதனிடையே விபத்து நடந்த இடத்திற்கு அருகில் 4 இரும்பு பெட்டிகள், ஒரு மினி வேனில் இன்னும் வெடி பொருட்கள் இருப்பதால் வெடி பொருள் தடுப்பு நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் கல்குவாரி பகுதிகளில் வெடி பொருட்கள் இருப்பதால் கல்குவாரி பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
உரிமையாளர் கைது
இதனிடையே விபத்துக்குள்ளான கல்குவாரியின் உரிமையாளர் சேது ஆவியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பல பெயர்களில் உரிமம் இருப்பது தெரியவந்துள்ள நிலையில் உரிமையாளர் மற்றும் அனுமதி பெற்ற நபர்களையும் கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.