தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருக்கும்வரை நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணை நடைபெறாது என்று அவருடைய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்ததாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். பிறகு உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாயினர். இவர்கள் வழங்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நிர்மலாதேவியும் கருப்பசாமியும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.  உதவி பேராசிரியர் முருகன் இன்று ஆஜராகவில்லை.


வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் செப்டம்பர் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நிர்மலா தேவிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தொடர்ந்து அரசியல் மிரட்டல்கள் இருந்துவருகின்றன. தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருக்கும்வரை நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணை நடக்காது” என்று தெரிவித்தார்.