விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அந்தக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சு: காலையில் ஒரு பத்திரிக்கை படிச்சேன். திருமாவளவன் ஒரு பானையை வைத்துக்கொண்டு செல்கிறார். அவர் பின்னால், வைகோ இரும்புக் கம்பியோடு நிற்கிறார். பானையை உடைக்கப் பார்க்கிறார் போல. இந்தக் கூட்டணி விளங்குமான்னு சொல்லுங்க?” என்று திமுக கூட்டணியை விமர்சித்து பேசினார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோதும், பொதுக்கூட்ட மேடையில் பேசுவதைப் போலவே பேசினார். “அமமுக என்ற கட்சி தேர்தல் களத்திலேயே இல்லை. தேர்தல் அறிக்கையில் என்ன வேண்மானாலும் சொல்லலாம். வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், வீட்டுக்கு ஒரு ஸ்கார்பியோ கார், வீட்டுக்கு ஒரு சாட்டிலைட்டு என்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அந்தக் கட்சி தேர்தல் களத்தில் இருக்க வேண்டுமே...
தேனியில் தங்க தமிழ்செல்வனை நிற்க வைத்திருக்கிறார். அவர் பாவம், தினகரனிடம் மாட்டிக்கொண்டு முழித்துக்கொண்டிருக்கிறார். அந்தத் தொகுதியில தினகரன் ஏன் நிற்கவில்லை? அவர் எப்படி நிற்பார்? அவருடைய பலம் அவருக்கே தெரியும். ஆர்.கே. நகரில் 20 ரூபா டோக்கன் கொடுத்துத்தான் வெற்றி பெற்றார். மீண்டும் டோக்கன் கொடுத்தால், அந்த டோக்கனாலேயே அடிப்பார்கள். இந்தத் தேர்தலோடு அமமுகவுக்கு மூடு விழா நடத்திவிடுவார்கள். பிறகு எல்லாரும் தாய்க் கழகமான அதிமுகவுக்கு திரும்பிவந்துவிடுவார்கள்” என்று ராஜேந்திர பாலாஜி பேசினார்.