தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் விளாத்திக்குளமும் ஒன்று. இத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் முயற்சி செய்துவந்தார். ஆனால், அத்தொகுதி அதிமுக, வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ சின்னப்பனை ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்தனர். தனக்கு சீட்டு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த மார்க்கண்டேயன் அதிருப்தி அடைந்தார்.
இதனையடுத்து அதிமுக தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்த மார்க்கண்டேயன், தினகரனுக்கு எதிராகப் பேசிய பேச்சுகளை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார். இத்தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உமா மகேஸ்வரி, மீண்டும் அமமுக சார்பில் போட்டியிடுவாரா மாட்டாரா என்ற கேள்வி உள்ளது. அமமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இதன் காரணமாக, அமமுக சார்பில் மார்க்கண்டேயன் களமிறங்குவார் எனப் பேசப்பட்டது. ஆனால், அமமுக சார்பில் அவருக்கு சீட்டு தருவது பற்றி எந்த உறுதியும் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து சுயேட்சையாகப் போட்டியிட மார்க்கண்டேயன் முடிவு செய்துவிட்டார். இதை முறைப்படி அறிவித்துள்ள மார்க்கண்டேயன், உடனடியாக தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.
விளாத்திக்குளம் தொகுதியில் மார்க்கண்டேயன் ஓரளவு செல்வாக்கு உள்ளவர் என்பதால், சுயேட்சையாக அவர் போட்டியிட முடிவு செய்திருப்பது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.