கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி 3 மகனும், ரஞ்சிதா(22) என்ற மகளும் உள்ளனர். இதில், ரஞ்சிதா கடைசி மகள் ஆவார். ரஞ்சிதா அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டபடிப்பு முடித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (22) பாலிடெக்னிக்கில் படித்து முடித்துவிட்டு, தனது அண்ணன் வைத்துள்ள மருத்து கடையில் வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக ரஞ்சிதாவுக்கும், சரவணகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலை பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் மிகுந்த மனவருத்தத்துடன் இருந்து வந்தனர். இதனையடுத்து, தங்கள் காதல் நிறைவேறாது என்று நினைத்து இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். 

இதற்காக நேற்று மாலை இருவரும் சூலக்கரை என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் உடல்கள் சிதறி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.