அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி, சிசு பலி; உறவினர்கள் ஆவேசம்
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி, சிசு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி முத்துமாரி. கர்ப்பிணியான முத்துமாரி பிரசவத்திற்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததாகவும் அந்த குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து முத்துமாரியை நேரில் பார்க்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்த போது முத்துமாரி அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார். தற்போது பார்க்க முடியாது என்று கூறியதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், மாலை 5 மணி அளவில் முத்துமாரி உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்றும் உரிய தகவல்கள் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். மேலும் முத்துமாரியின் மரணம் குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரி விருதுநகர் காரியாபட்டி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த விருதுநகர் காவல் உதவி கண்காணிப்பாளர் அர்ச்சனா, சாத்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் வினோத் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் மறியலில் ஈடுபட முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டு மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.