தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... கொரோனாவுக்கு மேலும் காவலர் உயிரிழப்பு..!
ராஜபாளையம் அருகே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவலர் இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 3 போலீசார் உயிரிழந்தனர்.
ராஜபாளையம் அருகே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவலர் இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 3 போலீசார் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமை காவலராக கலங்காபேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் (42) பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை காவலர் அய்யனார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு காவலர்கள் அனைவரும் வெளியில் அமர்ந்து தான் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 346 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த காவலருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முதல் பெண் குழந்தை 6-ம் வகுப்பும் இரண்டாவது ஆண் குழந்தை 3-ம் வகுப்பும் படித்து வருகின்றது. கொரோனாவுக்கு தமிழகத்தில் இதுவரை 3 போலீசார் உயிரிழந்துள்ளனர்.