ப்ளாக்கில் சரக்கு..! 300 ரூபாய்க்கு சுக்கு காபி வாங்கி பரிதாபமாக ஏமாந்த குடிமகன்கள்..!
சட்டத்திற்கு புறம்பாக வாலிபர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து அங்கு டாஸ்மாக் கடை அருகே பிளாக்கில் சரக்கு வாங்க குவிந்திருந்த குடிமகன்களிடம் தங்களிடம் சரக்கு இருப்பதாகவும் ஒரு குவாட்டர் 300 ரூபாய் என்றும் கூறியுள்ளனர். அதை நம்பிய குடிமகன்கள் அந்த வாலிபர்களிடம் 300 ரூபாய் கொடுத்து குவாட்டர் பாட்டில் வாங்கி இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் 21 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் மூடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது. ஊரடங்கு காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் இருக்கும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
20 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். தினமும் எங்காவது பிளாக்கில் விற்கப்படும் சரக்குககளுக்காக குடிமகன்கள் தேடி அலையும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. விதிகளை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்களை காவல்துறையும் அதிரடியாக கைது செய்து வருகிறது. இந்த நிலையில் மது என நினைத்து பிளாக்கில் சுக்கு காப்பியை வாங்கி குடிமகன்கள் ஏமாந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் இருக்கும் ரயில்வே மேம்பாலம் அருகே சட்டத்திற்கு புறம்பாக வாலிபர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து அங்கு டாஸ்மாக் கடை அருகே பிளாக்கில் சரக்கு வாங்க குவிந்திருந்த குடிமகன்களிடம் தங்களிடம் சரக்கு இருப்பதாகவும் ஒரு குவாட்டர் 300 ரூபாய் என்றும் கூறியுள்ளனர். அதை நம்பிய குடிமகன்கள் அந்த வாலிபர்களிடம் 300 ரூபாய் கொடுத்து குவாட்டர் பாட்டில் வாங்கி இருக்கின்றனர். பணத்தை கையில் வாங்கியவுடன் அந்த வாலிபர்கள் போலீஸ் வருவதாகக் கூறவே அங்கிருந்த குடிமகன்கள் அனைவரும் கிடைத்த மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினர்.அந்த நேரத்தில் இரு வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் உடனடியாக அந்தப் பகுதியை விட்டு கிளம்பி விட்டனர்.
மது கிடைத்த உற்சாகத்தில் செல்லும் வழியிலேயே குடிமகன்கள் சிலர் அதை குடிக்க முற்பட்டுள்ளனர். அதைத் திறந்து பார்த்தபோது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மது என அந்த வாலிபர்கள் கொடுத்துச் சென்ற பாட்டிலில் சுக்கு காபி நிரப்பப்பட்டிருந்தது. மது கிடைக்கவில்லை என்று திண்டாடிக் கொண்டிருந்த குடிமகன்கள் 300 ரூபாய் கொடுத்து ஏமாந்து சுக்கு காபியை வாங்கி இருக்கின்றனர். டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நூதன முறையில் வாலிபர்கள் பணம் பறித்த சம்பவம் குடிமகன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.