கீழே கிடந்த ரூ. 1.78 லட்சத்தை எண்ணி கூட பார்க்காமல் ஆட்சியரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கீழே கிடந்த ரூ.1.78 லட்சத்தை இளைஞர்கள் எடுத்துச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சார்ந்த பாரத் என்பவரது மகன் ஸ்ரீராம். இவர் அப்பகுதியில் இருக்க கூடிய ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு மாலை நேரத்தில் சென்று உள்ளார். அப்போது அங்கு நீல வடிவிலான ஒரு சிறிய மணி பர்ஸ் கிடைத்துள்ளது. அந்த மணி பர்ஸ் எடுத்துப் பார்த்த ஸ்ரீராம் அதில் பணம் இருந்ததை பார்த்துள்ளார்.
பணத்தைப் பார்த்த ஸ்ரீராம் அந்தப் பணத்தை கூட எண்ணி பார்க்காமல் ஸ்ரீராமும் மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் நடந்த சம்பவங்களை பற்றி நேரில் கூறி கீழே கிடந்த பணத்தையும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இளைஞர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் அந்த பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என எண்ணிப்பார்க்கச் சொல்லியுள்ளார்.
பணத்தை எண்ணிப் பார்த்த அதிகாரிகள் அதில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததாகவும், அதில் பேங்க் பாஸ்புக் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பாஸ்புக்கில் மணிகண்டன் எடையூர் என இருந்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உரிய விசாரணை மேற்கொண்டு பணத்தை தவறவிட்ட நபர்களிடம் பத்திரமாக ஒப்படைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பணத்தை அனுப்பி வைத்தார்.
கள்ளக்குறிச்சி அருகே கீழே கிடந்த ஒரு லட்சத்து 78 ஆயிரம் பணத்தை உரியவர்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் வந்து ஒப்படைத்த ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நன்றியையும்,வாழ்த்துக்களும் தெரிவித்தர். மேலும் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்திற்கு காரணமான இளைஞர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.