விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அதிவேகமாக தலைக்கவசம் அணியாமல் KTM பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள், கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த கோர விபத்தில் தலை நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் குபேந்திரன் (21) விழுப்புரம் மணிநகர் நான்காவது தெரு சுரேஷ் பாபு மகன் கார்த்திக் (21) ஆகிய இரண்டு இளைஞர்களும் KTM பைக்கில் விழுப்புரம் - புதுச்சேரி சாலை நல்லரசன்பேட்டை பகுதியில் தலை கவசம் அணியாமல் அதிவேகத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வலது புறமாக திரும்பியுள்ளனர்.
அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு இளைஞர்களும் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய பைக் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்து தொடர்பாக வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு இளைஞர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் சாலையில் அதிவேகமாக இருசக்கர தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் பயணித்தது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. விபத்தில் முகம் சிதையும் அளவுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
