வேலூர் மாவட்டம் பொய்கை மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு கார்த்தி, வேலு என்று இரண்டு மகன்கள் உள்ளனர். அண்ணன், தம்பிகளான இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் வேலை முடிந்து இரவில் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். மது அருந்தும் போது போதை அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, விவசாய நிலங்களில் கொக்கு வராமல் இருப்பதற்கு வைக்கப்படும் மருந்தை மதுவில் சிறிதளவு கலந்து குடித்து வந்துள்ளனர். 

சம்பவத்தன்றும் புத்தூர் ஏரிகால்வாய் அருகே இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது அதிக போதைக்காக கொக்கு மருந்தை கலந்துள்ளனர். ஆனால் வழக்கத்தை விட அதிகமாக கலந்ததாக தெரிகிறது. இதனால் மதுவை குடித்த இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதைப்பார்த்த அந்த பகுதியாக சென்றவர்கள், உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கார்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.