ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இருக்கும் எஸ்ஆர் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு சுகுமார் என்கிற மகன் இருக்கிறார். சுகுமாருக்கு பாரதி என்கிற பெண்ணுடன் திருமணம் முடிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக குடும்பத்துடன் வீட்டில் இருந்த பெரியசாமியிடம் அவரது மருமகள் போண்டா செய்வதற்காக மைதாமாவு வாங்கிவர கூறியிருக்கிறார்.

இதற்காக கடைக்கு சென்ற பெரியசாமி மைதாமாவு வாங்கியதுடன் தோட்டத்திற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தும் சேர்த்து வாங்கி வந்திருக்கிறார். அதை மருமகளிடம் கொடுத்துவிட்டு வேறு வேலைக்காக பெரியசாமி வெளியே சென்றிருக்கிறார். மைதா மாவுடன் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வந்து இருப்பது பற்றி தெரியாத பாரதி இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து போண்டா செய்திருக்கிறார். பின் அதனை தன் கணவர் மற்றும் மாமியார் மாமனார் ஆகியோருக்கு கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றன.ர் இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாரதி பரிதாபமாக உயிர் இழந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பாரதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.