தங்கம் கிராமுக்கு 1000 தள்ளுபடி; கவர்ச்சியில் மயங்கிய பொதுமக்கள் - பணத்தை சுருட்டிக்கொண்டு பெண் ஓட்டம்
தங்கம் கிராமுக்கு ரூ.1000 தள்ளுபடி விலையில் தருவதாகக் கூறி பலரிடமும் பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவான பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிபேட்டை மாவட்டம், மாந்தாங்கல் அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பெண் சசிகலா. இவர் ஈரோட்டில் உள்ள பிரபல ஏஜென்சியான ஸ்ரீ பாலாஜி மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தின் மூலம் தங்கம் கிராமுக்கு ரூ.1000 விலை மலிவாக கொடுப்பதாக கவர்ச்சிகரமான திட்டத்தை பற்றி பொதுமக்களிடம் எடுத்து கூறி, பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது முதலில் சிலரிடம் வாங்கிய சிறிய தொகைகளுக்கு உரிய தங்க நாணயங்களையும் வழங்கியுள்ளார். இதனை நம்பி கூலி வேலை செய்வோர், வியாபாரிகள், என பலரும் தங்களது சேமிப்பை முதலீடு செய்துள்ளனர். மேலும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்த திட்டத்தை கூறி ஏஜெண்ட் போல செயல்பட்டு அவர்களிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்பு அவர், கொடுத்த பணத்திற்கு தங்கத்தை வழங்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
பணத்தை கட்டிய பலரும் தங்களுக்கு சேர வேண்டிய தங்கத்தை கேட்ட போது, சசிகலா உரிய பதில் கூறாமல் மிரட்டும் தொணியில் பேசியதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த பணத்தை கட்டிய வாடிக்கையாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி புகார் அளித்தனர். குறிப்பாக அம்மூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரிடம் இருந்து மட்டும் 1.16 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் மீது ராணிப்பேட்டை போலீசார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணம் கட்டி ஏமார்ந்த சிலர் மீண்டும் புகார் அளித்த நிலையில், தலைமறைவாக இருந்த சசிகலாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கில் தொடர்புடையை சசிகலாவின் உறவினர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.