'நீங்கள் தான் எனக்கு உத்வேகம் தருகிறீர்கள்'..! ஆட்சியரை பாராட்டி கைப்பட கடிதம் எழுதிய கல்லூரி மாணவன்..!
நீங்கள் தான் எனக்கு உத்வேகம் அளிக்கிறீர்கள். நீங்கள் தான் எனக்கு முன்மாதிரியாக விளங்குகிறீர்கள். ஏழை மக்களுக்கு நீங்கள் ஆற்றும் பணிகள் மற்றும் இக்கட்டான சூழல்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியராக இருக்கும் சந்தீப் நந்தூரிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். ஆட்சித்தலைவராக அவர் திறம்பட செயல்படுவதாக கூறியிருக்கும் மாணவர், வேலூர் மாவட்டத்திற்கு அவர் வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கடிதத்தை பார்த்து வியந்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த கடிதத்தில், " 'நான் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது முதலாம் ஆண்டு பி.ஏ.ஆங்கிலம் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தான் எனக்கு உத்வேகம் அளிக்கிறீர்கள். நீங்கள் தான் எனக்கு முன்மாதிரியாக விளங்குகிறீர்கள். ஏழை மக்களுக்கு நீங்கள் ஆற்றும் பணிகள் மற்றும் இக்கட்டான சூழல்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. என்னுடைய லட்சியம் சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியராக உருவாகி என்னுடைய மாணவர்களை நாட்டின் சிறந்த குடிமக்களாக மாற்ற வேண்டும்.
சமூகத்திற்கான உங்களுடைய பணி வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் கண்டிப்பாக வேலூர் மாவட்டம் வரவேண்டும். அப்படி வரும் போது உங்களை நேரில் சந்தித்து உங்களுடன் தேநீர் அருந்த விரும்புகிறேன்". இவ்வாறு அந்த மாணவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் ஆட்சியர், இந்த நவீன யுகத்தில் கைப்பட எழுத்திய கடிதத்தை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று அந்த மாணவனை பாராட்டியுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.