ஒரு மருந்தகத்திற்கு வந்து சென்றவர்களில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை சென்னையில் மட்டுமே இருந்து வந்த பாதிப்பு தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,981 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,038 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பாதிப்பு 100ஐ கடந்து வந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் இன்றைய பாதிப்பு 200ஆக உயர்ந்துள்ளது.

ஆகையால், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களில் துறை வாரியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 45 கடைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டது.

இதனால் கொரோனா தொற்று பாதித்த 45 கடைகளும் உடனடியாக மூடப்பட்டு தற்போது அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல நோய் தொற்று பாதிக்கப்பட்ட கடைகளுக்கு வந்து சென்ற பொதுமக்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மூடப்பட்டுள்ள கடைகளுக்கு மாற்று ஊழியர்களை தற்காலிகமாக நியமித்து நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்படும்  என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல், வேலூர் மாவட்ட ஆட்சியர் பேட்டியளிக்கையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் குடியாத்தம் நகராட்சி சவாலாக மாறியுள்ளது. வேலூர் மாநகரில் நோய்ப் பரவல் கட்டுக்குள் உள்ளது. மேலும் ஒரு மருந்தகத்திற்கு வந்து சென்றவர்களில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.