வேலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அழையா விருந்தாளியாக வந்த கொரோனா வைரஸ் ருத்தரதாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,256ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 14,901 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 220-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்றும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 1,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக சென்னையில் மட்டும் 18,869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டமும், 3வது இடத்தில் திருவள்ளூர் மாவட்டமும் உள்ளது. 

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதில், குடியாத்தம் 6 பேரும்,  பேர்ணாம்பட்டு 7  பேரும், வேலூர் கஸ்பா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.