திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்த சாலையோர வியாபாரிகளின் தள்ளுவண்டியை தள்ளிவிட்ட நகராட்சி ஆணையரின் செயல் சர்ச்சையை கிளப்பி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையராக இருப்பவர் சிசில் தாமஸ். நேற்று அப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சாலையோரத்தில் வியாபாரிகள் சிலர் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த தாமஸ் விதிகளை மீறி விற்பனை செய்வதாக அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடம் வியாபரிகள் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர். அதை ஏற்காத தாமஸ் தள்ளு வண்டிகள், பழக்கூடைகளை தள்ளிவிட்டும் பொருள்களை காலால் எட்டி உதைத்தும் அராஜகம் செய்திருக்கிறார். அதை அங்கிருந்த சிலர் காணொளியாக பதிவு செய்யவே அது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது. வியாபாரிகள் விதிகளை மீறி நடந்திருந்தாலும் கூட நகராட்சி ஆணையர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர இவ்வாறு மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது செயலுக்கு நகராட்சி ஆணையர் வருத்தம் தெரிவித்துள்ளார். சந்தை என்பது நடமாடும் கடைகளுக்கானது அல்ல என்று தான் பலமுறை கூறி இருப்பதாகவும் அங்கிருந்த பலர் சமூக விலகலை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று ஏற்படக் கூடும் எனவும் விளக்கமளித்தார்.

மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் மீது வழக்கு பதிவு செய்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மேல்விஷாரம் நகராட்சி பொறியாளர் பாபு வாணியம்பாடி நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.