திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருக்கிறது விண்ணமங்கலம் கிராமம். இங்கிருக்கும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி ஒன்று நிலக்கடலை ஏற்றி வந்துகொண்டிருந்தது. பெங்களுருவில் இருந்து சென்னை நோக்கி அந்த லாரி சென்றது. அப்போது அதே சாலையின் அருகே சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி மற்றொரு லாரி சென்றுகொண்டிருந்தது.

இரு சாலைகளுக்கும் இடையே தடுப்புகள் இருந்தன. இந்தநிலையில் சென்னை நோக்கி சென்ற லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. தடுப்புகளில் மோதி உடைத்து அருகே இருந்த சாலைக்கு சென்ற லாரி, ஓசூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதில் இரு லாரிகளின் முன்பக்கமும் சுக்குநூறாக உடைந்தது. இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 5 பேர் லேசான காயமடைந்தனர். இந்த விபத்தால் அந்தத் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் போக்குவரத்தை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.