ராணிப்பேட்டை மாவட்டம் மேலெரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி(48). இவரது மனைவி அமலு. இந்த தம்பதியினருக்கு ஹரிணி(4) என்கிற மகளும் தர்ஷன்(2) என்கிற மகனும் இருந்துள்ளனர். இவர்களது வீட்டின் அருகே குளம் ஒன்று இருக்கிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் நேற்று வீட்டை சுத்தம் செய்யும் பணியில் அமலு ஈடுபட்டிருந்தார். குழந்தைகள் இருவரும் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர்.

திடீரென விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் குளக்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஹரிணியும் தர்சனும் குளத்தில் கால் தவறி விழுந்து விட்டனர். மதிய நேரம் என்பதால் அங்கு ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. அமலுவும் வேலை பளுவில் குழந்தைகளை கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனால் தண்ணீரில் விழுந்த குழந்தைகள் மூச்சு திணறி மயங்கிய நிலையில் கிடந்தனர். அந்தவழியாக சென்றவர்கள் குழந்தைகள் நீருக்குள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து மீட்டனர்.

குழந்தைகளை காணாது அமலுவும் தேடி குளக்கரைக்கு வந்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த குழந்தைகளை பார்த்து அவர் கதறி துடித்துள்ளார். இதையடுத்து குழந்தைகள் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். அதைக்கேட்டு அமலுவும் உறவினர்களும் கதறி துடித்தனர். காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஒரே நேரத்தில் அக்கா-தம்பி இருவரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'எத்தனையோ பேரை காப்பாற்றியிருக்கேன்.. ஆனா உன்ன பறிகொடுத்துட்டனே'..! உதவியாளர் மரணத்தால் உடைந்து போன அமைச்சர் விஜய பாஸ்கர்..!