உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் தமிழகத்தில் கொரோனா உக்கிரமடைகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது குணமடைவோரின் எண்ணிக்கை 52 சதவீதமாக உள்ளது. இதை மத்திய குழு பாராட்டி உள்ளது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா  வைரஸைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

தங்களது உயிரையும் பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் இரவு, பகல் பாராமல் போராடி வருகின்றனர். கொரோனாவை ஒழிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் ஒருபுறம் போராடி வருகிறார்கள் என்றால், ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வலியுறுத்தி காவல்துறையினர் மற்றொருபுறம் போராடி வருகின்றனர். 

இந்நிலையில் புதிதாக உதயமான திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வரும் தன்னார்வலர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். 

"

இந்த பணியில் முன்னாள் ராணுவ வீரர்களும், திருநங்கைகளும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், மளிகை கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் திருநங்கைகள் சமூக இடைவெளி குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கின்றனர். மேலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, முறையான சமூக இடைவெளியுடன் மக்கள் பொருட்களை வாங்கிச் செல்ல உதவுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.